பளை–முல்லைப்பூங்கா குடியேற்றக் கிராமத்தில் கோழி மற்றும் கால்நடைகளை வளர்ப்பதுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனர். அத்துடன் குடியிருப்பாளர்கள் மீது பல்வேறு கெடுபிடிகள் பிரயோகிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை–பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது முகாவில் கிராமம். இந்தக் கிராமத்தின் மல்வில் என்ற பகுதி யில் 2013ஆம் ஆண்டு தனியார் ஒருவரினால் முல்லைப்பூங்கா என்ற பெய ரில் சிறிய கிராமம் ஏற்படுத்தப்பட்டது.
இங்கு, மிகவும் வறுமைக்கு கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்க ளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்துவந்த சுமார் 60 குடும்பங்கள் வரை இங்கு குடியமர்த்தப்பட்டன.
இதுதொடர்பாக கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:இங்கு சிலருக்கு குடியிருப்பு பகுதியிலேயே வேலைகள் வழங்கப்பட்டன. பலர் வெளியிடங்களில் சென்றும் வேலை செய்து வருகின்றனர்.
எனினும், இங்குள்ள மக்கள் வாழ்வாதார உதவிகள்மூலம் கிடைக்கும் கோழி, ஆடு, மாடு போன்றவற்றைப் பெற்று வளர்ப்பதுக்கு முடியாத நிலையில் இருக்கின்றனர். அவ்வாறு வளர்ப்பதுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக பெண்களை தலைமைத்துவமாக கொண்டுள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இதுபோன்ற வாழ்வாதாரம் முக்கிய மானதாக காணப்படுகின்றது. இருப்பினும் இவற்றை வளர்ப்பதுக்கு குறித்த நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. எமக்கு அனுமதி வழங்குவதுக்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கோரிக்கை விடுகின்றன.
அதேநேரம், இரவு 6 மணிக்கு பின்னர் வாயில்கதவு பூட்டப்பட்டு விடும். வெளியில் செல்பவர்கள் உள்ளே வருவது பெரும் சிரமமாக இருக்கின்றது. இங்கு இரவு நேரக் காவலாளி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவசரமாக ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாயின் பெரும் சிரமப்பட்டு – காலதாமதத்துக்குப் பின்னரே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்–என்றனர்.