கௌதமாலாவில் உள்ள ஃபுயீகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கௌதமாலாவில் உள்ள ஃபுயீகோ என்ற எரிமலை சமீபத்தில் வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவியுள்ளதுடன், ஏராளமான வீடுகளை எரிமலைக் குழம்பு சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்தது தெரியவந்ததையடுத்து உயிரிழப்பு 69 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.
எரிமலை வெடிப்பால் சிதறிய சாம்பல் துகள்கள் இறந்தவர்களின் மீது படிந்து இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், நெருப்பு குழம்பினால் உயிரிழந்த பலருக்கு ரேகை இல்லாமல் போனதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தேசிய தடயவியல் நிறுவன இயக்குனர் ஃபனூயெல் கார்சியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் முகமூடி அணிந்துகொள்ளும் படியும், வீட்டுக்கூரைகளின் மேல் படிந்துள்ள எரிமலை சாம்பலை அகற்றுமாறும், உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்குமாறும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது.