சில சமயங்களில் நமது சருமத்தின் நிறமானது பல்வேறு காரணிகளால் கருமையாகின்றன. அதில் மாசடைந்த சுற்றுச்சூழல், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள், தூக்கமின்மை, மோசமான டயட் மற்றும் வாழ்க்கை முறை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்த காரணிகளால் நமது சருமத்தின் நிறமானது ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்ட நிறத்துடன் காணப்படும். குறிப்பாக முகத்தின் நிறம் தான் உடலிலேயே வேறுபட்டு காணப்படும். இப்படி வேறுபட்டு கருமையாக காட்சியளிக்கும் முகத்தின் நிறத்தை மேம்படுத்த பல்வேறு க்ரீம்கள் இருந்தாலும், அவற்றில் உள்ள கெமிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சரும ஆரோக்கியம் பாழாகும்.
இந்த ஐந்து எளிய இயற்கை எளிய வழிகளின் மூலம் சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்துக் காட்ட முடியும். இயற்கை வழிகள் என்னவென்று காண்போம்.
அரிசி மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
பால் -2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை: ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அக்கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உருளைக்கிழங்கு:
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1
செய்முறை: உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த செயலை செய்த பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். ஏனேனில் இச்செயலால் சருமம் வறட்சி அடைய வாய்ப்புள்ளது.
பேக்கிங் சோடா ஸ்கரப்:
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்
செய்முறை: ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்யுங்கள். பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள். இறுதியில் துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், எதிர்பார்த்த மாற்றத்தைக் காணலாம். இருப்பினும் முகப்பரு அதிகம் உள்ளவர்கள் மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இந்த முறையைப் பின்பற்ற வேண்டாம்.
தயிர் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்:
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவுங்கள். பின்பு 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் சரும நிறம் வேகமாக மேம்பட்டு காணப்படும்.