இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நாள் தொடக்கம் இதுவரையில் உள்ள பேட்ஸ்மேன்களில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் குமார் சங்ககாரதான் என்று மஹேல புகழாரம் சூட்டியுள்ளார்.
இலங்கை அணியில் விக்கெட் காப்பாளராக களமிறங்கிய சங்ககார, பின்னர் தலைசிறந்த பேட்ஸ்மேனாக மாறினார். அவர் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேலும், ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேலும் குவித்துள்ளார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பின் சங்ககார சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார். காலி டெஸ்டின் இறுதியில் சங்ககாரவிற்கு சிறப்பான வழியனுப்பும் விழா நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இவரது ஆட்டம் குறித்து அந்த அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மஹேல கூறுகையில்;
“இலங்கை அணியின் சிறந்த பேட்ஸ்மேன் யாரென்று கேட்டால், குமார் சங்ககாரதான் என்று நான் ஒளிவு மறைவின்றி சொல்லுவேன். நான், அரவிந்த் டி செல்வா ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள்தான். இருந்தாலும், ஏராளமான சாதனையை உருவாக்கியவர் சங்ககார. சர்வதேச போட்டியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மூலம் 60-க்கும் மேற்பட்ட சதங்களை விளாசியுள்ளார். இது மிகவும் மலைக்கவைக்கும் எண்ணிக்கை’’ என்றார்.
(riz)