(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படாதவிடத்து தனது கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகள் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆறு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து உறுப்பினர்கள்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நான்கு உறுப்பினர்கள் என சிறுபான்மை கட்சிகளின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த பதிவில் திங்கள் வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏழு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
அதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இது குறித்த இறுதி முடிவு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இறுதி முடிவில் சிக்கல் ஏற்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகள் தனித்து செயற்படும் என அறிவித்துள்ளமை சர்ச்சையாகியுள்ளது.