முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு தொடர்ந்தும் முக்கிய பிரமுகர்களுக்கு (வி.ஐ.பி) வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
சஜின் வாஸ் குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்காத நிலையில், அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏன் வழங்கப்படுகிறது என சமூக நியாயத்திற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைப்பின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது சரத் விஜேசூரிய ஜனாதிபதியிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள பேராசிரியர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளார்.
2011ம் 2012ம் ஆண்டு உட்பட சில ஆண்டுகளாக தனது சொத்து விபரங்களை வெளியிட தவறிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழு சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சஜின் வாஸ் குணவர்தன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டு வந்ததுடன் தற்போது புதிய அரசாங்கத்துடன் இணக்கத்துடன் செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.