சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களை சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 58 வயதான ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(09) சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 3.30 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-469 என்ற விமானத்தின் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்காகவே குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த நபர் எடுத்து வந்த பயணப்பையில் 50,000 யூரொ, 5,000 அமெரிக்க டொலர் மற்றும் 149 சிங்கப்பூர் டொலர் என மொத்தமாக 10,917,496 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.