சண்டியராக மாறிய நாமல்! ஆட்சியை பிடித்து அட்டகாசம் செய்யப் போவதாக மிரட்டல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சண்டியராக செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தன்னை அச்சுறுத்தியதாக காலி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் திஸர குணசிங்க, ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹிக்கடுவையில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தன்னை இவ்வாறு அச்சுறுத்தியதாக குணசிங்க தெரிவித்துள்ளார்.

திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில் தன்னை, நாமல் ராஜபக்ச மண்டபத்தின் பின் பக்கமாக அழைத்து சென்று, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்காமல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது ஏன் என்பது தொடர்பில் வினவியதாக குணசிங்க தெரிவித்துள்ளார்.

“நாங்கள் வெகு விரைவில் அதிகாரத்திற்கு வருவோம்… வந்தவுடன் பார்த்துக் கொள்கின்றோம். தங்களுக்கு இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றதென அதன்போது பார்த்துகொள்ள முடியும்… என நாமல் தன்னை அச்சுறுத்தியதாக குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு குணசிங்க செய்துள்ளதுடன் கொழும்பு குற்ற விசாரணை பிரிவிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

திஸர குணசிங்க, முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நந்த குணசிங்கவின் மகனாகும். அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவரை காலி மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.