சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச் செல்ல STF பாதுகாப்பு…

உயிர் அச்சுறுத்தல் காணப்படும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை சிறைச்சாலைகளிலிருந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நோக்கில் அழைத்துச் செல்லும் போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளை நீதிமன்றம் அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து விசேட கூட்டமொன்று எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

விசேட அதிரடிப் படையினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளது.

அண்மையில் களுத்துறைச் சிறைச்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், பாதாள குழுத் தலைவர்களில் ஒருவரான ‘சமயன்’ என்பவர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 7பேர் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.