இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் போட்டியில் சதம் விளாசிய தமிம் இக்பால், பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் மினி உலகக் கிண்ணம் என கருதப்படும், சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்று(01) துவங்கியுள்ளது.
இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, வங்கதேச அணியை எதிர்கொண்டிருந்தது.
துவக்க வீரராக களமிறங்கிய வங்கதேச வீரர் தமிம் இக்பால் 128 ஓட்டங்கள் விளாசினார். தவிர, இப்போட்டியில் பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் குவித்தது. இதில் தமிம் இக்பால் (128), முஷ்பிகுர் ரஹிம் (79), ஷகிப் அல் ஹசன் (10), சபீர் ரஹ்மான் (24) ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக துவக்க வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் தமிம் இக்பால் முதலிடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் முன்னாள் இலங்கை வீரர் ஜெயசூர்யா (122, 2006), அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (121*, 2005), மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பெர்டிரிக்ஸ் (105, 1973) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும், இங்கிலாந்துக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வங்கதேச வீரர்கள் பட்டியலிலும் தமிம் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2010ல், இங்கிலாந்துக்கு எதிராக தமிம் 125 ஓட்டங்கள் எடுத்திருந்தார். நேற்று அதை அவர் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 3வது விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் சேர்த்த தமிம், முஷ்பிகுர் ஜோடி ஆசியாவுக்கு வெளியே, வங்கதேச அணிக்காக அதிக ஓட்டங்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றுள்ளது.
இதற்கு முன் கடந்த 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த உலகக் கிண்ணம் தொடரில் முஷ்பிகுர், மஹ்மதுல்லா ஜோடி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 141 ஓட்டங்கள் சேர்த்தது.
கடந்த 2015 உலகக் கிண்ணம் தொடருக்கு பின் தமிம் இக்பால் பங்கேற்ற 28 இன்னிங்சில் பதிவு செய்த 5வது சதம் இது. அதற்கு முன் இவர் பங்கேற்ற 140 இன்னிங்சில் வெறும் 4 சதம் மட்டுமே அடித்திருந்தார்.