றகர் வீரர் வஸீம் தாஜுடீன் கொலை தொடர்பான தகவல்களை வெளியிட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மறுத்துள்ளார்.
தாஜுடீன் கொலை தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக குற்ற விசாரணை திணைக்களம் விசாரணை நடத்தி வருகிறது. கொலையுடன் தொடர்புடையதாக சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என தெரிய வருகிறது.
எப்படியிருப்பினும் சம்பவம் தொடர்பிலான சீ.சீ.ரி.வி காணொளி தற்போது வரையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை வெகு விரைவில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் பல உண்மைகள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி, நாரஹென்பிட்டி ஷாலிகா மைதானத்திற்கு அருகில் வஸீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டிருந்தார்.
வாகன விபத்தினால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும் இது கொலை என நீதிமன்ற வைத்தியர்களினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உண்மைகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசியான அனுர சேனாநாயக்க, சமகால அரசாங்கத்தின் சாட்சியாளராக மாற இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.