சமூக வலைதளங்களில் வலம் வரும் வட கொரிய அதிபரின் சகோதரரின் மகன்…

மலேசியாவில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட, வட கொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங்-நாமின் மகன் கிம் ஜோங்-சோல் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கிம் ஜோங்-நாம் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், அந்த மரணம் குறித்து கிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

“யூ டியூப்’ சமூக வலைதளத்தில், ஷெல்லிமா சிவில் பாதுகாப்பு (CCD) என்ற புதிய அமைப்பின் பெயரில் ஒரு விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் தோன்றும் நபர், தன் பெயர் கிம் ஜோங்-சோல் எனவும், மறைந்த கிம் ஜோங்-நாமின் மகன் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

மேலும், தனது தந்தை திட்டமிட்டு படுகொலை செயப்பட்டதாகக் கூறும் அவர், தான் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் யாருடைய பாதுகாப்பில் இருக்கிறார் என்று அவர் கூறுவது, வீடியோவில் ஒலித்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் காட்டும் கடவுச் சீட்டும், கருப்பு வட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் தோன்றும் நபர், கிம் ஜோங்-சோல்தான் என்பதை தென் கொரிய உளவுத் துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

வட கொரியாவின் மறைந்த அதிபர் கிம் ஜோங்-இல்லின் பேரன் என்பதால், அந்த நாட்டு அதிபர் பதவிக்கு கிங் ஜோங்-சோலும் தற்போதைய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு வாரிசுப் போட்டியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட கொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங்-நாம் (45) மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரு வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)