சமூர்த்திப் உத்தியோகத்தர் நியமிப்பில் இம்முறை ஊழல்கள் இடம்பெறாது…

சமூர்த்திப் உத்தியோகத்தர் நியமிப்பில் ஊழல்கள் இடம்பெறாது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்னும், “சமூர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் கிடைத்துள்ளன. நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டே உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவர், பரீட்சையில் சித்தியெய்தாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது” என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், நேற்று (07) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, குறுக்கு கேள்வியை எழுப்பிய சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான பரீட்சை நிறைவடைந்துள்ளது. எனினும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கின்ற வடக்கைச் சேர்ந்த அரசியல்வாதிகள், இந்தப் பரீட்சையில் சித்தியெய்தாவிட்டால் பரவாயில்லை. உங்களுக்கு அரசியல் ரீதியில் இந்நியமனத்தை பெற்றுத் தருகின்றோம் என அரசியல்வாதிகள் சிலர் கூறிவருகின்றனர்.
அரசியல்வாதிகள் சிபாரிசு செய்தால், இந்த நியமனம் கிடைக்குமா? என வினவினார்.
பதிலளித்த அமைச்சர் எஸ்.பி., “பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிவிட்டன. நேர்முகப்பரீட்சை நடத்தப்படும் அதில், புள்ளிகள் எவையும் இடப்படமாட்டாது. வேலைச் செய்வதற்கான திறமை உள்ளிட்ட விவகாரங்களே பார்க்கப்படும். இந்தப் பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படமாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.