சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் கடந்த சில நாட்களாக வீதியை மறித்து, டயர்களை எரித்தும், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான கூட்டு ஒப்பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்பிக்கப்படாமை, சம்பள அதிகரிப்புக்கு முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றமை மற்றும் பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான முன்னேற்றங்களும் காணப்படாமை, அதிகாரிகளினதும் சம்பந்தப்பட்டோரினதும் அசமந்தப் போக்கு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.