சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அமைக்கத் திட்டமிட்டிருந்த சம்பூர் அனல்மின் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் ஊடாக அரசாங்கம் நேற்று(13) உயர்நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.
எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள இந்திய தூதரக பேச்சாளர், எஷா சிறிவத்சவா, சம்பூர் விவகாரம் தொடர்பாக எந்த விடயங்களையும் இலங்கை அரசாங்கம் இதுவரையில் தெரியப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை, சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்கப் போவதில்லை என மின்சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்திருந்தார்.
சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக வரையறுக்கப்பட்ட சுற்றாடல் மன்றம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நேற்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சட்ட மாஅதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரட்ணம் இந்த விடயம் குறித்து தெரிவித்திருந்தார்.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.