சரத் வீரவன்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூத்த சகோதரர் சரத் வீரவன்ச, நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் தடைவிதித்துள்ளது.

ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி 8.4 மில்லியன் ரூபாய்கள் நட்டம் விளைவித்த குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டாம் என்று நீதிவான், குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அமைச்சராக இருந்த விமல் வீரவன்சவுக்கு பிரத்தியேக செயலாளராக சரத் வீரவன்ச செயற்பட்டார்.

இந்தநிலையில் அவர் ஜனாதிபதி செயலகத்தினால் விமல் வீரவன்சவின் அமைச்சுக்கு வழங்கப்பட்ட 12 வாகனங்களில் ஒன்றை தமது தனிப்பட்ட பாவனைக்கு எடுத்துக்கொண்டார்.

அத்துடன் அரச அதிகாரி அல்லாத அவர், அமைச்சின் மூலமாக எரிபொருள் உட்பட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுவந்துள்ளார்.

விசாரணைகள் காரணமாக அவர் தற்போது நாட்டில் இருந்து தப்பித்துச்செல்ல முயற்சிக்கிறார் என்று நீதிமன்றத்தில் சீஐடியினர் தெரிவித்தனர்.

இதனையடுத்தே நீதிமன்றம் அவரை வெளிநாடு செல்லமுடியாத தடையை விதித்தது.