அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஒய்வு பெற உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மெக்கல்லம் தனது 100-வது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளார். இந்த போட்டி பெப்ரவரி 12-ம் திகதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 20-ம் திகதி நடைபெறுகிறது. இந்த போட்டியுடன் மெக்கல்லம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்ற மறுநாளே மெக்கல்லம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக கனே வில்லியம்ஸ் நியூசிலாந்து அணியின் கெப்டனாக செயல்படுவார். இருப்பினும் உலகக் கோப்பை டி20 தொடர் வரை மெக்கல்லம் விளையாட வேண்டுமென்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி வலியுறுத்தி வருகிறது.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கல்லம் 6 ஆயிரத்து 273 ரன்கள் குவித்துள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக ஸ்கோர் 302 ரன்கள். இதேபோல் 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 ஆயிரத்து 909 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 166.
ஐபிஎல் போட்டிகளிலும் தனது அதிரடி ஆட்டம் மூலம் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர். கொல்கத்தா, கொச்சி, சென்னை ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 9-வது ஐபிஎல் தொடரில் ராஜ்கோட் அணிக்காக மெக்கல்லம் விளையாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.