சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவராக செப் பிளாட்டர் 1998-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கடந்த மே மாதம் நடந்த தலைவர் தேர்தலில் பிளாட்டர் மீண்டும் வெற்றி பெற்றார். இதற்கிடையில் சர்வதேச கால்பந்து சம்மேளன நிதி முறைகேடு தொடர்பாக சில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் 2-ந் திகதி பிளாட்டர் அறிவித்தார்.
புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிளாட்டர் தலைவராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதிய தலைவர் தேர்தலுக்கான சர்வதேச கால்பந்து சம்மேளனக் கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச்சில் அடுத்த ஆண்டு (2016) பெப்ரவரி 26-ந் திகதி நடைபெறும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய அக்டோபர் 26-ந் திகதி கடைசி நாளாகும். இந்த தேர்தலில் 209 உறுப்பு சங்கங்கள் வாக்களிக்க தகுதி படைத்தவையாகும்.
(riz)