சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை, ஐ.நா.சபை அறிவிப்பு..

(FASTNEWS | COLOMBO) – கடந்த பெப்ரவரி 14ம் திகதி இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர் எனக் கருதப்படும் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

குறித்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கான ஆதாரங்களை கடந்த மாதம் 27ம் திகதி பாகிஸ்தான் அரசிடம் இந்தியா ஒப்படைத்து அங்கு இருக்கும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்னர் இந்தியா முன்வைத்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ உரிமையால் நிராகரித்தது.

இந்நிலையில், உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமைய மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை இன்று அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.