ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
எமக்கான உரிமைகளைப் போன்று மற்றையோரின் உரிமைகளுக்கும் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் விதமாக மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பெப்ரவரி மாதம் 16ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உதயமானது. 53 நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இக் குழுவின் சிபாரிசின்படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின. டிசம்பர் 10 என்ற இதே நாள் 1950 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவித்து அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.