சர்வதேச றோட்டறி கழக மாநாட்டிற்காக பிரதமர் தென்கொரியா பயணம்

2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச றோட்டறி கழக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தென் கொரியா புறப்பட்டுச் செல்ல உள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவல் தொழிற்நுட்ப துறையில் உயரிய அபிவிருத்தியையும் கலாசார ரீதியில் முன்னேற்றமான நாடாகவும் தென் கொரியா வெற்றிகரமாக முன்னேற்றியுள்ளது.

இந்த விஜயத்தின் போது, தென் கொரியாவின் வெற்றியின் அனுபவத்தை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

160 நாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட றோட்டரி கழக பிரதிநிதிகளும் சில நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதேவேளை, மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்புரையாற்றவுள்ளதாக பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பிரதமருடன் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தவுதஹெட்டி, பிரதமரின் விசேட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் தென் கொரிய செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது