கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இழப்பீடு வழங்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை கணக்கிடும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும், குறித்த பணிகள் நாளையுடன் நிறைவடைய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக 76 அரச அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த அறிக்கை திங்கட்கிழமை பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்ட பின்னர் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
இது தவிர அனர்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பிரதேசத்தில் உள்ள 654 கட்டிடங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.