இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று(17) இலங்கை நேரப்படி மதியம் இரண்டு மணிக்கு மெல்போர்னில் நடைபெறவுள்ளது.
3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி இதுவாகும்.
இலங்கை கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக இடம் பெறாதிருந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இலங்கை அணி ஸ்கொட்லாந்துடனான ஒருநாள் தொடர் ஒன்றில் பங்கேற்கவுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 21ம் மற்றும் 23ம் திகதிகளில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதவுள்ளன.
இந்த போட்டி பெக்கிங்ஹேம் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடரை அடுத்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இப்போட்டி குறித்து ரங்கன ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்;
“இலங்கை அணியானது தொடர்ந்து தோல்வியினை தழுவிய நிலையில் ஒன்றும் சளைத்தவர்களாக ஆகவில்லை. அண்மையில் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்றோம். அணியின் பலத்திற்கு லசித் மாலிங்கவும் உள்வாங்கப்பட்டுள்ளார். இன்று மோதவுள்ள போட்டியானது சவாலாக இருந்தாலும் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது…” என தெரிவித்துள்ளார்.