அரசு உத்தியோகபூர்வ பயணமாக சவுதி அரேபியா நாட்டுக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு அரசை ஏமாற்றி 48,000 கோடி அமெரிக்க டாலர்களை கறந்து விட்டதாக ஈரான் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது ஜாவத் ஸரிப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜனநாயகம் மற்றும் நவீனமயம் என்ற பெயரில் சவுதி அரசை ஏமாற்றி 48 ஆயிரம் கோடி டாலர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறந்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் குறித்த இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து சுமார் 70,000 கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ தளவாடங்களை வாங்க சவூதி அரேபியா ஒப்பந்தம் செய்துள்ளது.
பின்னர், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிய டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என பேசினார். தீவிரவாதத்திற்கு எதிராக நடக்கும் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.