(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சஹ்ரானுடன் தொடர்புபட்ட அனைவரும் கோட்டாபயவுடன் தொடர்புபட்டவர்கள். ஹிஸ்புல்லாஹ் கூட பொதுஜன பெரமுனவின் நிழலாகவே செயற்பட்டு வருகிறார் என என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்த கூட்டமொன்றில் சஹ்ரான் ஹாசிம் அமர்ந்திருக்கும் காணொளியொன்று, அண்மையில் வெளியாகி சமகால அரசியல் களத்தில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீமை உடனடியாக கைது செய்யுமாறும் அந்த அமைப்பின் தலைவரினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பாக இன்று பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர், இதன் பின்னணியில் கீழ்த்தரமான அரசியல் காணப்படுவதாகக் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இன்று எம்மீது குறை கூறும் முஸ்லிம் மௌலவிமார்கள் கடந்த காலங்களில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.
நாம் தெரிவுக்குழு ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மைகளை வெளிக்கொண்டுவர முயற்சித்தோம். இதனை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு நேரடியாகவே தெரியப்படுத்தினோம்.
இதில் நாம் எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் செயற்படவில்லை. இந்த நிலையில், தற்போது எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைப்போல இதற்கு முன்னர் எமக்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.
நாம், இராஜினாமா செய்தபோதுகூட, நாம் குற்றவாளிகள் அல்லர் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். இப்படியிருக்கும்போது, தற்போது எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் கீழ்த்தரமான அரசியலின் வெளிப்பாடாகவே நாம் கருதுகிறோம்
அத்துடன், சஹ்ரானுடன் தொடர்புபட்ட அனைவரும் கோத்தபாயவுடன் தொடர்புபட்டவர்கள். ஹிஸ்புல்லாஹ் கூட பொதுஜன பெரமுனவின் நிழலாகவே செயற்பட்டு வருகிறார் என கூறியுள்ளார்.