ரம்பொடை இந்து கல்லூரியில் சாதாரணதர வகுப்பில் கல்விப் பயிலும் மாணவிகள் மூவர் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
சாதாரணதர பரீட்சைக்கான அனுமதிபத்திரம் இன்று வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த மாணவிகள் மூவரும் விசமருந்தியுள்ளனர். மாணவிகள் மூவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் பாடசாலை அதிபர் இது குறித்து தகவல் எதுவும் தெரியாது என அறிவித்துள்ளார். குறித்த மாணவிகள் மூவரும் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பாடசாலைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாடசாலைப் பரீட்சைகளுக்கு இவர்கள் சமூகமளிக்காத நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோரை அழைத்து வருமாறு அதிபர் கூறியமைக்காகவே இவர்கள் விசமருந்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.