சாலி – ரோஸி – நெளசர் பெளசி.. – களமிறங்குகிறது கொழும்பு மேயர் பதவிக்கு..

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சியை தவிர ஏனைய கட்சிகள் யாரை நியமிப்பதென்பதில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிய வருகின்றது.

கொழும்பு மாநகரசபையை பொறுத்த வரை கடந்த 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவான கட்சியே ஆட்சி செய்து வந்துள்ளதால், இம் முறையும் அதன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் மேயர் வேட்பாளராக முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் ரோஸி சேனாநாயக்கவை நியமிக்கப் போவதாக நம்பகரமான வட்டாரங்களின் மூலம் தெரிய வருகின்றது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமே இதுவரை காலமும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு போட்டியாக இருந்து எதிர்க்கட்சி தலைமை பதவியை பெற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போட்டியிடவுள்ளதால் எதிர்க்கட்சி தலைமை பதவிக்கு கடும்போட்டி இடம்பெறலாம் என தெரியவருகின்றது.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக யாரை நியமிப்பதென்பதில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேயர் வேட்பாளராக அசாத் சாலியை நியமிக்கப்போவதாக பரவலாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸாத் சாலி முன்னர் கொழு ம்பு மாநகரசபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு பிரதி மேயராக இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பெளசியின் மகன் நெளசர் பெளசியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேயர் வேட்பாளராக நியமிக்கவும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

-reeshmaa..