வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த தென்கொரியா நாட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் நாளை(12) சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
குறித்த இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரண்டுள்ளனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கொரியா அரசுக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையவழி (ஆன்லைன்) ஊடகங்களின் சார்பாக இரு பத்திரிகையாளர்கள் உரிய அனுமதி இல்லாமல் சிங்கப்பூரில் உள்ள வடகொரியா நாட்டு தூதர் அலுவலகத்துக்குள் நுழைந்தமை காரணமாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, சிங்கப்பூருக்குள் நுழைய அந்த பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி இரத்து செய்யப்பட்டு, அவர்கள் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் பொலிசார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.