சிரியா அப்பாவி மக்களை குறிவைத்த இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்..

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், சிரியாவில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது அமெரிக்கா திடீரென ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 04ம் திகதி நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் எந்த தளத்திருந்து நடைபெற்றதோ அப்பகுதியில் தாக்குதல் நடத்த தான் உத்தரவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மனித நேயம் கொண்ட அனைத்து நாடுகளும், சிரியாவில் நடைபெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று(06) அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசுகையில், எதிர்கால சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

அவரது இந்த சமிக்ஞை, அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஷராத் விமானப்படைத் தளத்திலிருந்துதான் ரசாயன தாக்குதல் தொடுக்கப்பட்டதாகக் கூறும் அமெரிக்கா, அந்த தளத்தின் மீதுதான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

(rizmira)