சிரியா விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தியமை உறுதி..

சிரியாவில் கடந்த ஏப்ரல் 4ம் திகதி நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வேதியியல் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4-ஆம் திகதி இரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட குறித்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்க சோதனையில் தெரிய வந்துள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட 10 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்ததில் சரீன் வாயு பயன்படுத்தி இருப்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள், சரீன் வாயுவை பயன்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் 7 பேரிடம் இருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகள் இருவேறு ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பலரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறித்த இந்த சம்பவம் குறித்து வாக்கெடுப்பு நடத்தி மீண்டும் விவாதிக்க, அதிகாரிகள் குழு நாளை(21) கூட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)