சிறைக்குள் அரங்கேற்றப்பட்ட நாடகம்! கட்சி உறுப்பினர்களின் கேள்விகளால் திணறிய வீரவன்ச!

தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை கூட்டம், தலைவர் விமல் வீரவன்சவின் தலைமையில் கடந்த புதன் கிழமை இடம்பெற்றது.

கிட்டத்தட்ட 3 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், விடுதலையான பின்னர் வீரவன்ச கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இங்கு கட்சி நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட வேண்டிய அவசியம் காணப்பட்டது. எனினும் அங்கு பிரதானமாக அவரது உண்ணாவிரதம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் முன்னெடுத்த உண்ணாவிரதம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். விமல் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டிருக்க கூடாதென்பதே கட்சி அரசியல் சபையின் பலரது கருத்தாகியுள்ளது. அத்துடன் உண்ணாவிரதத்திற்கு பலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் விமல் கருத்து வெளியிட்டிருந்தார். உண்ணாவிரதத்திற்கான காரணத்தை விமல் முன்வைத்துள்ள நிலையில் அது பல மணி நேரம் கலந்துரையாடலாக மாற்றமடைந்துள்ளது.

இதன்போது நாம் தற்போது மே தினத்திற்கு ஆயத்தமாக வேண்டும். கூட்டு எதிர்க்கட்சியான எங்கள் பலத்தை மக்களுக்கு காட்ட வேண்டும். இதனால் எங்களால் முடிந்தளவு மக்களை அழைத்து வந்து பலத்தை காட்டுவோம் என விமல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறையில் இருந்த போது எழுதப்பட்ட புத்தகத்தை என்ன செய்வது என அரசியல் சபை உறுப்பினர் ஒருவர் விமலிடம் வினவியுள்ளார்.

மே தினத்திற்கு பின்னர் அந்த புத்தகங்கள் வெளியிடப்படும் என விமல் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச வாகனங்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட வீரவன்ச சுமார் மூன்று மாதங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார். இதன்போது பல்வேறு தடவைகள் பிணை கோரி மனு சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. எனினும் பலரின் அனுதாபங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வீரவன்ச பல நாடகங்களை அரங்கேற்றி பிணையை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.