கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து வெலிகடை சிறைச்சாலை நோக்கி சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம், பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பிலான சந்தேகநபர்களைக் கொண்டு சென்ற குறித்த சிறைச்சாலை பஸ் மீது, கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் தெமட்டகொடை பகுதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.
இதன்போது குறித்த பஸ்சில் இருந்த தெமட்டகொடை சமிந்த எனப்படும் சமிந்த ஜெயநாத் எனும் சந்தேகநபர் காயமடைந்தார்.
இதனையடுத்து, அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், வைத்திய வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை சிறைச்சாலைகள் தலைமையகம் இது தொடர்பிலான விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைய விரைவில் காயமடைந்த சந்தேகநபரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.