சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதத்தால் குறைவு

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின் தற்போது முதற்தடவையாக சீனாவானது தனது மூன்றாவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதமாக 6.9 சதவீதம் என்ற மிகக் குறைவான வளர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளது.

இது, அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்பட்ட 7 சதவீதம் என்ற இலக்கை விட குறைவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், ஜூலை தொடக்கம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 6.8 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எதிர்பார்த்திருந்த நிலையில், அதை விட சிறிய முன்னேற்றமாக பொருளாதார வளர்ச்சி வீதம் இருக்கின்றது.

வெளியாகியுள்ள இந்தத் தரவுகளின் மூலம், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, நிதியியற் கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய அழுத்தம், கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த கோடை காலத்தில், அதீத மாறுதலுக்குள்ளான பங்குச்சந்தை காரணமாகவும், நலிந்த பொருளாதார தரவுகள் காரணமாகவும் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலை, உலகளாவிய ரீதியில் பங்குச்சந்தைகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கடந்த மாதம் சீனாவிலிருந்தான ஏற்றுமதிகள் பாரிய வீழ்ச்சியைக் கண்டிருந்த சமயம், பொருட்கள் மற்றும் சேவைகள் பாரிய உயர்வைச் சந்திதிருந்தமையானது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனா, மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது என்று அதிர்ச்சியைத் தோற்றுவித்திருந்தது.