இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், சீனி மற்றும் சீமெந்து கைத்தொழில் துறைகளில் இலங்கையில் முதலீடு செய்யுமாறு பாகிஸ்தான் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இருதரப்பு அரசியல் மாநாட்டின் 5 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளரை நேற்று(17) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகால நட்புறவு நிலவுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அந்த உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு உற்சாகமளித்து கால்நடை பண்ணைகள் மற்றும் பால் உற்பத்திக்காக உதவி வழங்க பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் அடுத்த அரச தலைவர்கள் மாநாடு பாகிஸ்தானில் நடைபெறுவதற்கு இலங்கையால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹீட் அகமட் ஹஸ்மாட் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.