யாழ்ப்பாணத்தில் 13 மாடி கட்டட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று(07) ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிலையின் கட்டளை 23 இன் கீழ் 2 இல் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தனது பதிலில் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்தில் 13 மாடியைக் கொண்ட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு பூர்த்தியாகியுள்ளன.
இருந்த போதிலும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கை ஒழுங்குமுறை பிரகாரம் ஆரம்பிக்கப்படவில்லை.
இது குறித்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது பரவலாக ஆராய்ந்தேன்.
அத்துடன், குறித்த இருதய சத்திர சிகிச்சையில் பணியாற்றுவதற்கு 4 பேருக்கு கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.