சீரற்ற காலநிலை காரணமாக 54 பாடசாலைகள் இன்றும் திறக்கப்படாது – கல்வியமைச்சு

வெள்ளநிலை மற்றும் மண்சரிவு, உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிப்படைந்த மற்றும் அகதி முகாம்களாக உள்ள 54 பாடசாலைகள் இன்று(05) திறக்கப்பட மாட்டாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஏனைய சகல பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மேல் மாகாணத்தில் மூடப்பட்ட சகல பாடசாலைகளும் இன்று திறக்கப்படும். தென்மாகாணத்தில், அகதி முகாம்களாக உள்ள 10 பாடசாலைளும் பாதிக்கப்பட்ட 29 பாடசாலைகளைத் தவிர, ஏனைய பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் அகதி முகாம்களாக உள்ள 15 பாடசாலைகளைத் தவிர, ஏனைய பாடசாலைகள் யாவும் இன்று மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, அகதி முகாம்களாக உள்ள, ஏனைய பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக அதிகாரம், அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத வகையில், பாடசாலைகள் பாதிப்படைந்து இருந்தால், அந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை, அண்மையில் இருக்கின்ற பாடசாலை அல்லது பாடசாலைகளுடன் இணைத்து முன்கொண்டு செல்வதற்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 

(rizmira)