சீழ் நிறைந்த பருக்கள் விரைவில் மறைய என்ன செய்யலாம்?

இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஒரு வகையான சரும பிரச்சினை தான் சீழ் நிறைந்த பருக்கள். இம்மாதிரியான பருக்கள் மயிர் கால்களை பாக்டீரியாக்கள் ஆழமாக தாக்குவதால் வரும். இந்த வகை பருக்கள் கடுமையான வலியைத் தரும். மேலும் இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும்.

இதற்கு காரணம் எண்ணெய் பசை சருமம் மட்டுமின்றி, வெளியே அதிகம் சுற்றுவதால் கிருமிகள் சருமத்தை தாக்கி, சருமத்துளைகளினுள் நுழைந்து, ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவது தான். ஆனால் இந்த பிரச்சினைக்கு ஒருசில இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண முடியும். குறிப்பாக நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே, சீழ் நிறைந்த பருக்களுக்கு தீர்வு காணலாம்.

கருஞ்சீரகம்:
ஒரு கையளவு கருஞ்சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை பருக்களின் மீது தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். வேண்டுமானால், கருஞ்சீரகத்தை சாப்பிடலாம். இதன் மூலமும் சீழ் நிறைந்த பருக்களை சரிசெய்யலாம்.

பிரட் மற்றும் பால்:
பிரட்டை சூடான பாலில் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நிலையில்அதை சீழ் நிறைந்த பருக்களின் மீது வைத்தால், அவ்விடத்தில் உள்ள கிருமிகளை அழித்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விரைவில் மறையச் செய்யும். இச்செயலை தினமும் 2 முறை செய்து வந்தால், சீக்கிரம் பருக்கள் மறைந்துவிடும்.

மஞ்சள்:
இதை நேரடியாக சீழ் நிறைந்த பருக்களின் மீது தூவலாம். இதனால் இவ்விடத்தில் இருந்து வெளிவரும் இரத்தக்கசிவு தடுக்கப்படும். இல்லாவிட்டால், பாலில் மஞ்சள் தூளைக் கலந்து குடிக்கலாம். இதனாலும் சீழ் நிறைந்த பருக்கள் வருவதைத் தடுக்கலாம். மஞ்சள் இரத்தத்தை சுத்தம் செய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஏராளமாக கொண்ட பொருள் என்பதால் விரைவில் நல்ல பலனைத் தரும்.

வெதுவெதுப்பான நீர் ஒத்தடம்:
சுடுநீரில் நனைத்த துணியால் சீழ் நிறைந்த பருக்களின் மீது ஒத்தடம் கொடுப்பதால், வலி குறைவதோடு, அவ்விடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து விரைவில் பருக்கள் குணமாகும்.

அதற்கு சுடுநீரில் நனைத்த துணியை சீழ் நிறைந்த பருக்களின் மீது 10 நிமிடம் வைக்க வேண்டும். வேண்டுமானால் சுடுநீரில் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் நனைத்த துணியையும் பயன்படுத்தலாம்.

இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்ய, நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயம்:
ஒரு துண்டு வெங்காயத்தை, நேரடியாக பருக்களின் மீது வைத்து, ஒரு துணியால் கட்டிக் கொள்ளுங்கள். சில மணிநேரங்கள் இப்படியே விட்டுவிடுங்கள். பின்பு துணியை கழற்றுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்யுங்கள். இதனால் சீழ் நிறைந்த பருக்கள் விரைவில் குணமாகி மறைந்துவிடும்.