சுங்க சட்ட மூலம் குறித்து விரைவில் விவாதம்..

சுங்க சீர்த்திட்ட சட்ட மூலம் குறித்து நிதி அமைச்சரினால் விரைவில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்று முன்வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தேச சுங்க சட்ட மூலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால், சுங்க திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இதனால்அரசாங்கத்துக்கு பல பில்லியன் நட்டம் ஏற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற அமர்வில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் குறித்த சட்ட மூலம் தொடர்பில் சுங்க திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருவதாகவும் அவர் நிதியமைச்சர் மீது குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர், சுங்க சட்டமூலத்தின் சில சரத்துகள் சீர்த்திருத்தப்பட வேண்டும் என்றும், எனினும் சட்ட மூலம் முழுமையாக மாற்றியமைக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

அத்துடன் நிதி அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும், விரைவில் இது குறித்த விளக்க அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.