மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாக, அமைச்சர் டிலான் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
2004ம் ஆண்டு சபாநாயகர் ஒருவரை கூட நியமிக்க முடியாத அரசாங்கமே தம்மிடம் இருந்ததாகவும், பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டு 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாகவும் டிலான் பெரேரா மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேபோல் மஹிந்த புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டதாக சிலர் கூறுவதாக இங்கு சுட்டிக்காட்டிய அவர், இதனால் வடக்கில் வாக்களிப்பது தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும் குறித்த ஒப்பந்தம் பிரபாகரன் தோற்றதால் நல்ல ஒப்பந்தமானது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தந்தை மேலும் 15 வருடங்களுக்கு அதிகாரத்தில் இருந்தால் நாட்டின் தலைவராக நாமல் ராஜபக்ஷ நினைத்திருந்ததாகவும் ஆனால் அது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தல்ல எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியல்ல என்பதை அவரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்திருந்தார்.
இன்னும், நாமல் ராஜபக்ஷ அவரின் விருப்பத்துக்கு அறிக்கைகளை வெளியிட முடியாது என்றும் டிலான் பெரேரா தெரிவித்தார்.
தாம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நேசிப்பவன் என்றும் மற்றவர்கள் எல்லோரும் கூட்டாட்சியில் இணைந்து விட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளமை தொடர்பிலேயே டிலான் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அவரின் தந்தையாரின் கட்சியல்ல என்பதை நாமல் ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானப்படியே அந்தக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டது.
இந்நிலையில் சிறிய வயது என்றபடியால் நாமல் ராஜபக்ஷ இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்ட டிலான், சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு எதிராக செயற்பட்டால் அவருக்கு எதிர்கால அரசியல் இல்லை என்றும் தெரிவித்தார்.