சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளுடன் இணைந்து சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்ததாக குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்தக் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களின் சார்பில் இம்முறை நாடாளுமன்றிற்கு தெரிவானவர்களுக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் நாட்களில் முறைப்பாடு செய்ய உள்ளார்.

கட்சியின் ஒழுக்கத்தை பேணும் நோக்கில் வேறும் கட்சிகளுடன் இணைந்து ஊடக சந்திப்புக்களை நடாத்துதல் கூட்டு ஊடக சந்திப்புக்களை நடாத்துதல், கூட்டங்களை நடாத்துதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் இந்தக் குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

கட்சியின் உத்தரவுகளை மீறிச் செயற்படும் அனைத்து உறுப்பினர்கள் தொடர்பிலும், ஐக்கிய தேசியக் கட்சியில் கடந்த தேர்தலின் போது போட்டியிட்டவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஸ்ட உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.