சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு அவசர கூட்டம் நாளை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு நாளை செவ்வாய் கிழமை அவசரமாக கூடவுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹாவலி கேந்திர நிலையத்தில் நாளை முற்பகல் 10.00 மணிக்கு சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது .

இரண்டு மாதங்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை மன்றக் கல்லூரியில் இறுதியாக சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் 38 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் நாளைய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பது என தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்குமாறு அனைத்து நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது.