சுயநலமின்றி நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – அஸ்கிரிய பீடாதிபதி

தாய்நாட்டையும் மக்களையும் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென கண்டி அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்தாதஸ்ஸி தேரர் அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் ரீதியாக முக்கியமற்ற விடயங்களை சாக்காக தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்தி விவாதிப்பதில்  எந்த பலனுமில்லை, நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி செயற்பட வேண்டியதே இன்றைய அவசியமானது.

இன்றைய பேசு பொருளாக உள்ள 20ம் திருத்தச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அரசியல்வாதிகள் உனக்கெனக்கென்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அரசியல் அமைப்பு திருத்தங்களின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சிலர் கோருகின்றனர். எனினும், பொருத்தமான நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது கட்டாயமானது.

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பூரண தெளிவுடையவர்கள் மட்டுமே கருத்து வெளியிட வேண்டும்.நாட்டில் சர்ச்சைக்குரிய நிலைமையை ஏற்படுத்தாது நாட்டினதும், மக்களினதும் நலனை முதன்மையாகக் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென கலகம ஸ்ரீ அத்தாமஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், நேற்று அஸ்கிரி பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போதே  இந்தக் கருத்துக்களை அஸ்கிரி பீடாதிபதி வெளியிட்டுள்ளார்.