தேசிய அரசாங்கத்தின் கீழ், வழங்கப்படவுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உரறுபினர்களுக்கு இடையில் மோதல்கள் உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், தேசிய அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை வழங்க சுதந்திரக் கட்சி தவறும் பட்சத்தில் அக்கட்சியை புறந்தள்ளி தனியொரு அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தின கீழ் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குமாறு ஜனாதிபதியும் சு.க.வின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிடம் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாரிய எதிர்ப்புக்கள் வெளிவந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதனாலேயே அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.
மேலும்; சுதந்திரக் கட்சியினர் அரசியல் விவகாரங்கள், நிதி, மின்சாரம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி போன்ற அமைச்சுகளை கோருவதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் திருப்தியடையவில்லையாயின் தேசிய அரசாங்கம் குறித்த முக்கிய தீர்மானமொன்றை தமது கட்சி எடுக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினால் சுதந்திரக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம்;
‘தேசிய அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை வழங்க சு.க தவறும் பட்சத்தில் அக்கட்சியை விட்டுவிட்டு தனியான அரசாங்கமொன்றை அமைக்க தமது கட்சியினால் முடியும்’ என்று குறிப்பிட்டார்.
அத்துடன், தனியாட்சி நடத்தக்கூடிய வல்லமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதாகவும் கபீர் ஹாஷிம் மேலும் தெரிவித்தார்.
(riz)