தென் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் நடைபற்று வரும் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள சூடான் அதிபர் ஒமர் அல்-பஷிரை கைது செய்யுமாறு அந்நாட்டு அரசை சர்வதேச நீதிமன்றம் நேற்று கேட்டுக்கொண்டது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க மனித உரிமை அமைப்பை சேர்ந்த வழிக்கறிஞர் ஒருவர் ஜோகன்னர்ஸ்பர்க் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி பஷிரை கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஹான்ஸ் பேப்ரிகஸ், பஷிர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்குமாறு தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
எனினும் இதனால் எவ்வித பதட்டமும் அடையாமல் காணப்பட்ட பஷிர், நேற்றைய மாநாட்டு நிகழ்ச்சிகளில் கோட் சூட்டுடன் கலந்துகொண்டார். இன்றுடன் மாநாடு முடிவடைய உள்ள நிலையில், பஷிர் கைது செய்யப்படுவாரா, அல்லது சூடான் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்று மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு சூடானில் நடைபெற்ற போரில், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும், போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த பஷிர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போதுதான், பஷிரை கைது செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.