ஹம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டரங்கில், நடத்தப்படும் திருமண வைபவமொன்றுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் வாடகை அறவிடப்படும் என்று தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திருமண வைபவங்களிலிருந்து கிடைக்கும் வருமானம், விளையாட்டரங்கை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஹேசா விதானகே, கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், சூரியவெவ கிரிக்கெட் விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு 4,283 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. கடன் பெற்றே இவ்விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த இந்த விளையாட்டரங்கில் இற்றைவரைக்கும் சர்வதேச ஒருநாள் போட்டிகள் 11, இருபதுக்கு 20 போட்டிகள் ஒன்பதும் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
இன்னும், குறித்த விளையாட்டரங்கு திருமண வைபவமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடப்படும். அதனை நிறுத்தமுடியாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த விளையாட்டரங்கை, சர்வதேச ரீதியில் பயிற்சியளிப்பதற்கான நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.