சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி – பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை…

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி வத்தளையில் ஆரம்பித்து களனி, மொரட்டுவை, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஊடாக, லிப்டன் சுற்றுவட்டம் வரை பயணிக்கவுள்ளது.

எனவே வாகன சாரதிகள் நெரிசலைத் தவிர்க்க மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலிருந்து பேஸ்லைன் வீதியூடாக மாளிகாவத்தை வழியில் கொழும்பு கோட்டை வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வத்தளை நகரிலிருந்து ஜப்பான் நட்புறவு பாலம் , ஹிங்குருகடை சந்தி மருதானை ஊடாக மற்றுமொரு மாணவர் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணி களனியிலிருந்து முன்னெடுக்கப்படும் பேரணியோடு மருதானையில் இணைந்துக் கொள்ளவுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள மற்றுமொரு மாணவர் பேரணி கொஹூவளை , ஹெவலோக் சந்தியூடாக கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்திலிருந்து மற்றுமொரு மாணவர் பேரணியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஹைலெவல் வீதியூடாக ஹெவலோக் சந்தியை அடைந்த பின்னர் இந்த மாணவர் பேரணி மொரட்டுவையிலிருந்து முன்னெடுக்கப்படும் மாணவர் பேரணியோடு இணையவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் பேரணிகள் காரணமாக குறிப்பிட்ட வீதிகள் ஊடாக வாகன நெரிசல் ஏற்படலாம் என்பதால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.