சைட்டம் கல்லூரியானது கறுப்புப் பட்டியலிடப்படவில்லை – நெவில் மறுப்பு..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியானது கறுப்புப் பட்டியலிடப்படவில்லை என மருத்துவ கல்லூரியின் வெளிவாரி விரிவுரையாளரும் பேராசிரியர் டொக்டர் நெவில் பெரேரா தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பிரித்தானிய மருத்துவ சபை கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. இலங்கை மருத்துவ சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படும் வரையில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பிரித்தானிய மருத்துவ சபையின் பரீட்சைகளுக்கு தோற்ற முடியாது என அறிவித்துள்ளது.

எனினும், மருத்துவ கல்லூரி கறுப்புப் பட்டியலிடப்படவில்லை. இலங்கை மருத்துவ சபையினால் அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னர் பிரித்தானிய மருத்துவ சபையும் அனுமதி அளிக்கும்.

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பிரித்தானிய மருத்துவ சபை இவ்வாறு நிறுவனங்களை கறுப்புப் பட்டியலிடும்.

சைட்டம் உள்ளிட்ட உலகின் 11 மருத்துவ கல்லூரிகளின் மாணவ மாணவியர் பிரித்தானிய மருத்துவ சபையின் பரீட்சைகளில் தோற்ற முடியாது என அறிவித்துள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டுமன்றி அரச மருத்துவ கல்லூரிகளுக்கும் இவ்வாறு தற்காலிக அடிப்படையில் பரீட்சைகளில் தோற்ற அனுமதிக்கப்பட்டிருந்தது…” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)