சைட்டம் தனியார் கல்லூரியினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

மாலபே, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரி தொடர்பில் எதிர்வரும் 10ம் திகதி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக, இலங்கை வைத்திய சபை தெரிவித்துள்ளது.

சைட்டம் தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வைத்திய சபையின் பதிவாளர் டெரன்ஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மாலபே வைத்தியக் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த கல்லூரிக்கு மருத்துவப் பட்டத்தை வழங்க அனுமதியுள்ளது என அண்மையில் தீர்ப்பளித்தது.

மேலும், அங்கு பட்டத்தை நிறைவு செய்தவர்களை வைத்தியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து இலங்கை வைத்திய சபை பெற்றுக் கொண்ட சட்ட அறிவுரைகளுக்கு அமைய, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, டெரன்ஸ் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.