மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை, ஒருபோதும் மக்கள் மயமாக்க நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று(28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடமும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமும் சைட்டம் விவகாரம் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சுகாதார அமைச்சுக்குள் நுழைந்த மாணவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்தமை தொடர்பாக அமைச்சர் ராஜிதவிடம் வினவியபோது கூறியதாவது,
“ரத்துபஸ்வலயில் போராட்டம் நடத்தியர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பொதுமக்களை கொலை செய்த ஒருவர் தான் தற்போது இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது.
“..புரட்சித் தலைவரான லெனின் கூட இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தீவிரவாதியென்றே வர்ணித்துள்ளார். இப்படியிருக்கும்போது, தீவரவாதிகள் போல் செயற்பட்ட மாணவர்கள் மீது பொலிஸார் நடந்து கொண்ட விதத்தை எவ்வாறு தவறு என்று கூறுவது?.. .
“மாணவர்களை அடித்தது குற்றம் என்றால், அவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து பல மில்லியன் ரூபாய் சொத்துகளை சேதமாக்கியது குற்றமாக தெரியவில்லையா? 25 ஆயிரத்துக்கும் மேல் அரச சொத்தை எவரேனும் சேதமாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், அவர் பிணையில் கூட செல்ல முடியாது. அந்தவகையில், தற்போது நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் இவர்கள் பிணையில் வெளியே வருவது இலகுவான காரியம் அல்ல..” என்றார்.
மேலும், “சைட்டம் விவகாரத்தில் நாம் தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டு வருகிறோம். எச்சந்தர்ப்பத்திலும் சைட்டம் தனியார் கல்லூரியை, ஒருபோதும் மக்கள் மயமாக்கமாட்டோம்” எனவும் தெரிவித்தார்.