இலஞ்ச ஊழல் தொடர்பில் கடந்த மூன்று வருடங்களில் 10,182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு அமைவாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே குறித்த திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டு 3,964 முறைப்பாடுகளும், கடந்த 2016 ஆம் ஆண்டு 3,450 முறைப்பாடுகளும், கடந்த 2017 ஆம் ஆண்டு 2,768 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இலஞ்சம் தொடர்பான சட்டத்திற்கு அமைவாக சொத்துக்கள் தொடர்பான விபரங்களை அறிவிக்காமை தொடர்பில்;
களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன், நீர்கொழும்பு நகர சபையின் முன்னாள் தலைவர் ஆர் எண்டனி, பாதஹேவாஹெர பிரதேச சபையின் முன்னாள் தலைவர், பண்டார ராஜபக்ஷ, தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எஸ் ஜயதிலக்க, நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் குமார, சியம்பலாண்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமன் வர்ணகுலசூரிய, பேலியகொடை நகர சபையின் முன்னாள் தலைவர் ஆனந்த பெரேரா, வலல்லாவிட்ட பிரதேச சபையின் தலைவர் உதேனி பியரியங்க ஆகியோருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் முன்னாள் அமைச்சர்களான கே பி திசாநாயக்க ரம்புக்வெல, பிரியங்கர ஜயரத்ன, எச் எம் பௌசி, மகிந்தானந்த அழுத்கமகே, ஜொன்ஸ்ட்டன் பெர்ணாண்டோ, கே ஏ வெல்கம, மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன ஆகியோருக்க எதிராகவும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காமை தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஹிங்குரான சீனி தொழிற்சாலையின் முன்னாள் தலைவர் எஸ் பிரேமரத்ன, படல்கும்புர பிரதேசத்தின் முன்னாள் செயலாளர் சீ ரத்நாயக்க, முன்னாள் மன்றாடியார் நாயகம் எச் எம் எம் டி நவாஸ், முன்னாள் சட்டமா அதிபர் எம் எம் பீரிஸ், மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர், எம் எச் பேர்டினேண்டோ, லக்சல மொத்த விற்பனை நிலையத்தின் முன்னாள் தலைவர் ஏ கொஸ்வத்த, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜே பி ஹீன்கேந்த, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூபசிங்ஹ, சுங்கப்பிரிவின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கே ரஞ்சன், மிஹின் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ் டி வாஸ் குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர், பி பி விக்ரமகே, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர், பி எம் ஜே ஜயசுமக சந்திவங்ச, மற்றும் தேசிய இரத்த வங்கியின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் ஆர் எம் பிங்துசார ஆகியோருக்கு எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.